மத்திய அரசு அதிகாரி என கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்தவர் கைது
மூணாறு: மத்திய அரசு அதிகாரி என கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த பாலக்காடு, கோங்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சாயை 32, இடுக்கி போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் மணியாரன்குடியைச் சேர்ந்தவர் ரோபி. இவரது உறவினர்கள் பாலக்காட்டில் உள்ளனர்.
அவர்கள், பாலக்காட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடக்க உள்ளதால், அதற்கு முன்பாக பணி நடக்கும் பகுதிகளில் ரோட்டோரம் நிலம் வாங்கி போட்டால் மூன்று மடங்கு அதிகம் விலை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி ரோபி உறவினர்களிடம் ரூ.3.68 லட்சம் கொடுத்தார். அந்த பணம் திரும்ப கிடைக்காததால் பிரச்னை ஏற்பட்டது.
அப்பிரச்னையில் தாமாக முன் வந்து தலையிட்ட சுரேஷ்சாயி, தன்னை மத்திய அரசு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டதுடன், மேலும் ரூ.14 லட்சம் கொடுத்தால் ரூ.49 லட்சம் கிடைக்கும் என ரோபியிடம் ஆசை வார்த்தை கூறினார்.
அதனையும் நம்பி பலரிடம் கடன் வாங்கி ரூ.14 லட்சம் கொடுத்தார். குறிப்பிட்ட கால அளவில் பணம் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோபி போலீசில் புகார் அளித்தார். இடுக்கி இன்ஸ்பெக்டர் சஜீவ்சந்தோஷ், சுரேஷ்சாயை கைது செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.