தென்னந்தோப்பில் புகுந்த சிறுத்தை கால் தடங்களால் விவசாயிகள் அச்சம் வனத்துறை தீவிர கண்காணிப்பு
தேனி: தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி பகுதி விவசாய நிலத்தில் சிறுத்தை நடமாட்டம் அறிந்த விவசாயிகள் அச்சமடைந்து அதனை பிடிக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
பொம்மையக்கவுண்டன்பட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தம்பிராண் காணல் மலைப்பகுதி கன்னிமார்கோயில் பெரிய வாய்க்கால் பாதையில் உள்ளது. நேற்று காலை தோப்பில் முருகேசன் தோட்ட வேலைக்காக சென்றார். நிலத்தில் சிறுத்தையின் கால்தடங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சிகுஓடை பாசன விவசாய சங்க நிர்வாகி பிரகாஷிடம் தெரிவித்தார்.இருவரும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் புகார் மனு அளித்தனர். அதில் அப்பகுதியில் 3 நாட்களாக சிறுத்தைகள் விளை நிலங்களுக்கு வந்து செல்வது அதிகரித்துள்ளது. உயிர்சேதம் நடக்கும் முன், வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க வேண்டும் என கோரினர். கலெக்டர் உத்தரவில், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா,தேனி வனத்துறையினர் உடனே சிறுத்தை கால்தடம் பதிந்த தோட்டப்பகுதிக்கு சென்று, அது சிறுத்தையின் காலின் தடமா என உறுதி செய்தனர்.
பெருமாள் கோயில் பகுதியில் 2 சிறுத்தைகள் உள்ளது எனவும், அதனை கண்காணித்து வருகிறோம். அவை தோட்டத்திற்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.