கூட்டணி தொடர்பான விபரங்களை பழனிசாமி தான் கூறுவார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேட்டி
தேனி: ”கூட்டணி தொடர்பான விபரங்கள் குறித்து பொது செயலாளர் பழனிசாமி தான் கூறுவார்,” என, தேனியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
தேனியில் மார்ச் 2ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெரியகுளம் ரோடு மதுராபுரியில் நடக்கிறது. இந்த விழா கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. பணிகளை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், உதயகுமார், செல்லுார் ராஜூ, மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
பின் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: தேனி ராசியான இடம். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இங்கு வெற்றி பெற்றுள்ளனர். சரித்திரம் மீண்டும் திரும்புகிறது. இதனை நினைவுப்படுத்த இங்கு பொதுக்கூட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இந்த ஊரில் ஒரு மனிதர் அவ்வளவு தான். அவருக்கும், கூட்டம் நடத்துவதற்கும் சம்பந்தம் இல்லை.
பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி சந்திப்பு குறித்து அவர்களே தெரிவித்துள்ளனர். கூட்டணி தொடர்பான விபரங்களை பழனிசாமி தான் தெரிவிப்பார்.
கூட்டணி வியூகங்கள் குறித்து தற்போது வெளியில் சொல்ல முடியாது. பன்னீர்செல்வத்தை இணைப்பது குறித்து நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இரு மொழி கொள்கை தான் எங்கள் கொள்கை. மும்மொழி கொள்கை குறித்து கவலை இல்லை. மூன்று மொழி படிப்பவர்கள் பற்றி கவலை இல்லை. படிக்கட்டும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் மொழி திணிப்பதை விரும்பவில்லை.
மத்திய அரசு நிதி கொடுக்காமல் இருப்பது தவறு.
இங்கு கூடும் கூட்டத்தை விட அதிக கூட்டம் கூட்ட வேண்டும் என பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கூறியிருப்பது அவர்களுக்கு பயம் வந்து விட்டதை காட்டுகிறது.
அம்மா என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுாறு சதவீதம் பொருத்தமானது. ஸ்டாலினின் தந்தையை அப்பா என்று அழைத்தனர். தற்போது அவரையும், ‘அப்பா’ எனக்கூற நினைக்கிறார் என்றார்.