அரசு பஸ்களை பராமரிக்க உபகரணங்கள் இன்றி தவிப்பு! சொந்த செலவில் சீரமைப்பதாக புலம்பும் ஊழியர்கள்
மாவட்டத்தில் உள்ள அரசு பஸ் டெப்போக்களில் வாகனங்களை பராமரிக்க போதிய உபகரணங்கள் இன்றி ஊழியர்கள் தவித்து வருவதுடன், பஸ் உதிரிபாகங்களை டிரைவர்கள், கண்டக்டர்களின் சொந்த செலவில் வாங்கி பொருத்தும் நிலை நீடிப்பதால் அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் 7 இடங்களில் அரசு போக்குவரத்து கழக பஸ் டெப்போக்கள் உள்ளன. இந்த டெப்போக்களில் இருந்து 80 டவுன் பஸ்கள் மாவட்டத்திற்குள்ளும், 200 பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகின்றன. ஏழு டெப்போக்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக் என 2100 பேர் பணிபுரிகின்றனர். பல டவுன் பஸ்கள், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில பஸ்கள் போதிய பராமரிப்பு இன்றி ஜன்னல்கள் சேதமடைந்தும், மேற்கூரை, பயணிகள் லக்கேஜ் வைக்கும் பகுதிகள் சேதமடைந்த நிலையிலும் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் பஸ்கள் பாதியில் நிற்பதாலும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாவது தொடர்கிறது.
உபகரணங்கள் இல்லை:
போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், ‘அனைத்து அரசு டெப்போக்களிலும் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை. இயந்திரங்கள் சீரமைப்புப் பணிக்காக அரசு உபகரணங்கள் வாங்கி கொடுத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தேவையான சிறு, சிறு உபகரணங்கள் டெப்போக்களில் பணியில் உள்ள மெக்கானிக்குகள் சொந்த செலவில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதே போல் பஸ்கள் உடைந்த கண்ணாடி, ஹாரன், ஹெட் லைட் போன்றவற்றை டிரைவர், கண்டக்டர்கள் வாங்கி பொருத்துகின்றனர். மெயின் ஆக்ஸில் பராமரிப்புப் பணியில் முக்கிய தேவையான ஜாக்கி, கியர், கிளட்ச் பாக்ஸ் இரக்க தேவைப்படும் ஜாக்கிகள் போதிய அளவில் இல்லை. இதனால் மெயின் ஆக்ஸில், கியர், கிளட் பாக்ஸ் சீரமைப்பு பணிகளில் சிரமம் உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையால் டவுன் பஸ்கள் ஒப்பந்த பணியாளர்கள் கொண்டு இயக்கப்படுகிறது. மெக்கானிக் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், கண்ணாடி, ஹெட் லைட் போன்ற பஸ் உதிரி பாகங்களை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’, என்றனர்.