Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

உடையகுளம், செங்குளத்தில் சாக்கடை கலப்பதால் மாசுபடும் நீராதாரம் துார்வார சின்னமனுார் விவசாயிகள் வலியுறுத்தல்

சின்னமனூர் : சின்னமனூரில் நெல் சாகுபடிக்கு பாசன வசதியளிக்கும் உடையகுளம், செங்குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

செப்பேடுகள் கண்ட சின்னமனூரில் 1800 ஏக்கரில் நெல் சாகுபடியாகிறது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு இங்குள்ள உடைய குளம், செங்குளம் பாசன வசதியளிக்கிறது. 75 ஏக்கர் பரப்பளவிலான உடைய குளத்திற்கு பெரியவாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. சின்னவாய்க்கால் மூலம் செங்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. உடையகுளத்தில் முழு கொள்ளளவை எட்டியதும், உபரி நீர் செங்குளத்திற்கு செல்லும், உடையகுளம், செங்குளமும் தொடர்ச்சியாக உள்ளது. இரண்டும் சேர்ந்து 150 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

உடையகுளம், செங்குளம் நீண்ட காலமாக தூர்வாராததால் புதர் மண்டியுள்ளது. 2023 ல் கண்மாய்களில் கரம்பை அள்ள அனுமதியளிக்கப்பட்ட போது கூட, உடையகுளத்தில் அள்ள அனுமதிக்கவில்லை. இதன் விளைவு குளம் மண்மேவி மேடாகியது.

சின்ன வாய்க்காலில் வரும் சாக்கடை கழிவு நீர் அப்படியே செங்குளம், உடைய குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. குளக்கரைகள் பலமிழந்துள்ளது.

தண்ணீர் முழு கொள்ளளவை எட்டும் போது, கரைகள் உடையும் அபாயம் உள்ளது. குளத்தில் உள்ள 3 மடைகளும் பழுதடைந்துள்ளது. இதனால் இந்த கண்மாய் இருந்தும், பயனற்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கி நிதி உதவியில் கரைகள் பலப்படுத்தும் பணி பெயரளவில் அரைகுறையாக நடந்தது. விவசாயிகளும், விவசாய சங்கங்களும் பலமுறை கோரிக்கை வைத்தும், தூர்வாரும் பணிமேற்கொள்ளப்படவில்லை.

துார்வார வேண்டும்

சிங்காரவேலன், வழக்கறிஞர், சின்னமனூர் : உடைய குளம் தூர் வாராததால் தண்ணீர் முழு அளவில் நிரப்ப முடியவில்லை. நடு மடையை தாண்டி தண்ணீர் செல்ல முடியாத அவலம் உள்ளது.

மழை காலங்களில் கூட தண்ணீர் முழு அளவில் நிரம்பாத நிலை உள்ளது. இதனால் மழை வெள்ள நீரால் கரை உடையும் அபாயம் உள்ளது.

எப்போது இந்த கண்மாய் தூர் வாரியது என்பது தெரியவில்லை, உடையகுளம், செங்குளத்தில் சாக்கடை கலப்பதை தடுத்து கழிவுநீர் சுத்திகரிக்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்கு முன்பே சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் மூலம் சுருளியாற்று தண்ணீரை இந்த கண்மாய்களில் நிரப்பி விவசாயம் நடைபெற்றுள்ளது.

எனவே உடைய குளம் கண்மாயை தூர் வாரவும், கரைகளை பலப்படுத்தவும், மடைகளை பராமரிப்பு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாய்க்காலில் வரும் கழிவுநீரால் மாசு

பாலசுப்ரமணி, விவசாயி, சின்னமனூர் :

சின்னமனூர், பூலாந்தபுரம் நெல் விவசாயத்திற்கு பாசன வசதியளிக்கும் உடைய குளம், செங்குளத்தை தூர்வார வேண்டும். உடைய குளம், செடி கொடிகள், மரங்கள் வளர்ந்து உருமாறி வருகிறது. மண் மேவி வருவதால், தண்ணீர் தேக்க முடியாத சூழல் உள்ளது. மழை வெள்ள நீரை தேக்கி வைக்கவும், கரைகளை பலப்படுத்தவும், மடைகளை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்ன வாய்க்கால் சாக்கடையாக மாறி கண்மாயில் கலந்து மாசுபடுத்தி வருகிறது. சாக்கடை கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சின்னமனூர் நகரின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க உதவும் உடையகுளத்தை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *