மாடுகள் சினைப்பிடிப்பு திறன் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைகிறது; ஸ்கேன் செய்து ஆய்வு நடத்த கால் நடை துறை முடிவு
கம்பம்: தேனி மாவட்டத்தில் மாடுகள் சினைப் பிடிக்கும் சதவீதம் 50 க்கும் கீழ் குறைவதால், சினைப் பிடிக்காத மாடுகளை ஸ்கேன் செய்து கள ஆய்வு செய்ய கால்நடை துறை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை போல் கால்நடைகளிலும் சினைப் பிடிக்காத சதவீதம் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மாடுகளில் சினைப் பிடிக்காத தன்மை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதை தடுக்க மலடு நீக்கும் சிறப்பு மருத்துவ முகாம்களை கால்நடை பராமரிப்பு துறை, நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் கடந்தாண்டு நடத்தியது. திட்டம் கடந்த டிசம்பருடன் முடிந்தது.
தேனி மாவட்டத்தில் எரசக்கநாயக்கனூரில் மலடு நீக்க சிறப்பு முகாம் நடந்தது.கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்து ஸ்கேன் கருவிகள் கொண்டு வரப்பட்டு 20 மாடுகளை ஸ்கேன் செய்து, சினை பிடிக்காததற்கான காரணங்களை கண்டறிந்தனர். தொடர் சிகிச்சைக்கு உள்ளூர் டாக்டர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. எனவே, சினை பிடிப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்த கால்நடை துறை திட்டமிட்டுள்ளது. கால்நடை பல்கலையில் உள்ள ஸ்கேனை ஒவ்வொரு பகுதியாக எடுத்து சென்று, சினைப் பிடிக்காத மாடுகளை கண்டறிந்து, அவற்றை ஸ்கேன் செய்து, காரணத்தை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சினை பிடிப்பு திறன் குறையகாரணங்கள்
இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறுகையில், ‘ இயற்கை கருவூட்டலில் 7 முதல் 9 மில்லி விந்தணு கிடைக்கும். செயற்கை கருவூட்டலில் 0.5 மில்லி மட்டுமே செலுத்தப்படுகிறது. இயற்கை கருவூட்டல் இன்றி சினை ஊசி மூலம் கருவூட்டல் செய்வது. தகுதிவாய்ந்த கால்நடை டாக்டர்கள் மட்டுமே சினை ஊசியை சரியாக செலுத்த முடியும். டாக்டர்கள் அல்லாதவர்களும் சினை ஊசி செலுத்துவதால் சினை
பிடிப்பு திறன் குறைகிறது. கால்நடைகளுக்கு சரிவகித தீவனமாக புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின், இதர சத்துக்கள் சரிவிகிதத்தில் கிடைக்காத்தும், சினை பிடிக்கும் காலத்தை சரியாக கணிக்காததும், இனப்பெருக்க உறுப்புக்களில் நோய் தாக்குதல், கனநீர் பற்றாக்குறை, மரபியல், உடற்கூறு பிரச்னைகள் என பல்வேறு காரணங்கள் உள்ளன. இரண்டு அல்லது மூன்று கன்றுகள் பிரசவித்த மாடுகள் அதிகளவில் சினைப் பிடிக்காமல் உள்ளது என்றனர்.
சிறப்பு திட்டம் தயார்
தற்போது தேனி கால்நடை பல்கலை இதற்கென ஒரு சிறப்பு திட்டம் தயாரித்துள்ளது. அரசின் அனுமதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒவ்வொரு கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களுக்கு ஸ்கேன் இயந்திரங்களை கொண்டு சென்று, சினை பிடிக்காத மாடுகளை பரிசோதித்து ஸ்கேன் செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய முடிவு செய்துள்ளனர். மேலும் அதற்கான தீர்வும் கூற உள்ளனர். எனவே விரைவில் மாடுகளின் சினைப் பிடிக்கும் சதவீதம் அதிகரிக்கும் என்கின்றனர்