சுகாதார வளாக கட்டட பணி துவங்காததற்கு கலெக்டர் கண்டிப்பு
நிர்வாக அனுமதி அளித்தும் 4 மாதங்களாக சுகாதார வளாக கட்டுமான பணி துவங்காதது ஏன் என கலெக்டர் கடமலை மயிலை ஒன்றிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இயக்குநர் அபிதா ஹனீப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தில் துாய்மை பாரத திட்டத்தில் ரூ3.5 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைக்க 4 மாதங்களுக்கு முன் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் துவங்க வில்லை. இதுபற்றி கடமலை ஒன்றிய அதிகாரிகளிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். பதில் அளித்த அலுவலர் ,’இடத்தேர்வு முடியவில்லை என்றும், இடம் தேர்வு செய்தாலும் அங்கு கட்ட கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணி துவங்குவதில் தாமதம்,’ ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுகாதார வளாகம் அமைத்து அறிக்கை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.