முல்லைப் பெரியாறு தண்ணீர் கழிவு நீர் கலப்பதால் மாசுபடுகிறது! குடிநீராக பயன்படுத்தும் கிராம மக்கள் பாதிப்பு
லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரை ஓடும் முல்லைப் பெரியாற்றின் தண்ணீரை தேனி மாவட்ட மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்துகின்றனர்.
லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்துள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய கிராமங்களில் உரை கிணறு அமைத்து ஆற்றுநீரை பம்பிங் செய்து நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 344 கன அடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதில் 100 கன அடி மதுரை குடிநீருக்கும், 100 கன அடி லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் பம்பிங் செய்தது போக 144 கன அடி மட்டுமே ஆற்றில் ஓடுகிறது.
இதில் விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக குறைவாக செல்லும் ஆற்று நீரில் கூடலுாரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. மேலும் குறுவனத்துப் பாலம், காஞ்சிமரத்துறை பாலம் உள்ளிட்ட ஆற்றின் பல்வேறு கரைப்பகுதிகளில் தேங்காய் மட்டை கழிவுகள் மற்றும் குப்பை அதிக அளவில் கொட்டப்படுகிறது.
இதனால் நேரடியாக பம்பிங் செய்து குடிநீருக்கு பயன்படுத்தும் ஆற்றின் கரையோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும்.