தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் குடித்து தற்கொலை
தேனி, மார்ச் 12: தேனியில் தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் விஷ விதை தின்று தற்கொலை செய்து கொண்டார். தேனி நகர் பாரஸ்ட் ரோடு 3வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி மகன் தமிழரசன்(47). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் இவரது தாய் முத்தம்மாள் இறந்தார். இதனால் தானும் சாகப்போகிறேன் எனக் கூறியபடி இருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலையில் சவாரி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற தமிழரசன், தேனி பழைய பஸ்நிலையத்தில் விஷ மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக தமிழரசன் உயிரிழந்தார். இது குறித்து தமிழரசனின் மகன் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.