மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
தேவதானப்பட்டி, மார்ச் 14: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(33). இவர் 200 செம்மறி ஆடுகளை 18ம்படி கருப்பசாமி கோவில் பகுதியில் தனியார் விளைநிலத்தில் கிடை அமர்த்தியுள்ளார். 4 நாட்களுக்குமுன் அதிகாலை ஆடுகள் இங்கும் அங்கும் ஓடுவதை ஜெயக்குமார் பார்த்தபோது ஆட்டுக்கிடைக்குள் இருந்து சிறுத்தை ஒன்று ஓடியது.
உள்ளே சென்று பார்த்த போது 5 ஆடுகள் கடித்து இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தார். இதனால் விவசாயிகள் அச்சத்துடன் இருந்துவந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதே பகுதியில் பகலில் சிறுத்தை நடமாடுவதை அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர். இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு பயந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.