புதிய ரக பன்னீர் திராட்சை அறிமுகம் செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
கம்பம் : பன்னீர் திராட்சையில் கண்டுபிடித்துள்ள மேம்படுத்தப்பட்ட புதிய ரகம் விவசாயிகளுக்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் திராட்சை விவசாயிகள் உள்ளனர்.
ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதி என்ற பெருமையை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
ஒடைப்பட்டி யில் விதையில்லா திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. பன்னீர் திராட்சையில் செவட்டை நோய் குறைவு தன்மை குறைவு உள்ளது.
இப் பிரச்னையை தவிர்க்க ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம், கோவை வேளாண் பல்கலை. இணைந்து பன்னீர் திராட்சையில் மேம்படுத்தப்பட்ட ரகம் ஒன்று 3 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர்.
பன்னீர் திராட்சையில் 14 ரகங்கள் உள்ளன. அதில் 5வது ரகத்தை ஆராய்ச்சி செய்து, புதிய மேம்படுத்தப்பட்ட ரகம் கண்டுபிடிக்கப்பட்டது.
தேனி திராட்சை கலெக்சன் 126 (Theni Grapes collection 126) சுருக்கமாக டிஜிசி 126 என்று பெயரிடப்பட்டது. கோடை காலத்தில் கவாத்து அடித்தால், மகசூல் குறையும். அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய ரகத்தில் மகசூல் குறையாது. பனி காலத்தில் கவாத்து அடித்து கோடையில் அறுவடை செய்தால் இனிப்பு தன்மை 22 முதல் 26 பிரிக்ஸ் வரை கிடைக்கும்.
ஆனால் தற்போதுள்ள ரகத்தில் இனிப்பு தன்மை 18 முதல் 20 பிரிக்ஸ் மட்டுமே உள்ளது.
இந்த புதிய ரகம் வெளியிடுவது தொடர்பான முடிவை கோவை வேளாண் பல்கலை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. – புதிய ரகத்தை விரைந்து அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.