காயம் பட்ட ஒற்றை கொம்பன் பூர்ண நலம் மருத்துவகுழு அறிக்கை தாக்கல்
மூணாறு: காலில் பலத்த காயத்துடன் சுற்றித்திரியும் ஒற்றை கொம்பன் யானை நலமுடன் உள்ளதாக மருத்துவ குழு அறிக்கை தாக்கல் செய்தனர்.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை, ஒரு தந்தத்தைக் கொண்ட ஒற்றை கொம்பன் காட்டு யானை ஆகியவை கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் பிப்.5ல் பலமாக மோதிக் கொண்டன. அதில் ஒற்றை கொம்பனில் முன் இடது காலில் ஆழமாக காயம் ஏற்பட்டது. அந்த காயம் பிப்.15ல் தெரிய வந்தபோதும், அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முன் வராததால் காயத்துடன் சுற்றித்திரிந்தது.
அதற்கு சிகிச்சை அளிக்கக்கோரி டபிள்யூ. ஈ.எப்.ஏ.ஏ. எனும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினர் கேரள உயர் நீதி மன்றத்தை அணுகியதால், வனத்துறை கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுராஜ் தலைமையில் நான்கு டாக்டர்களை கொண்ட மருத்துவ குழு மார்ச் 8 முதல் யானையை கண்காணித்தனர். அவர்கள், மூணாறு வனத்துறை அதிகாரியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: யானையின் காலில் 40 அங்குலம் நீளம் 6 அங்குலம் அகலத்தில் ஏற்பட்ட காயம் சரியாக தொடங்கி விட்டது. அந்த காயத்தால் சாப்பிடவும், நடக்கவும் எவ்வித பிரச்னை இல்லை என்பதால், யானை பூர்ண நலமுடன் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
தற்போது பெட்டிமுடி வனத்துறை அதிரடி படையினர் யானையை கண்காணித்து வருகின்றனர். எவ்வித சிரமமும் இன்றி யானை கல்லார், நல்ல தண்ணி, சோலைமலை, கடலார் ஆகிய பகுதிகளுக்கு வெகு தூரம் நடந்து சென்றதாக அதிரடிபடையினர் தெரிவித்தனர்.