தனியார் கல்குவாரியால் விளை நிலங்கள் பாதிப்பு தடுத்து நிறுத்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு
தேனி: தேனி அருகே பூதிப்புரம் வலையபட்டி பகுதியில் செயல்படும் தனியார் குவாரியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கிராமத்தினர் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.தேனி பூதிப்புரம் அருகே உள்ள வலையபட்டி மகேந்திரன் தலைமையில் கிராமத்தினர் வழங்கிய மனுவில், ‘கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி, கிரஷர் உள்ளது.
இங்கிருந்து வெளியேறும் நீரால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மாசுபடுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கிறது. சுற்றி உள்ள கிராமத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். குவாரி மீது நடவடிக்கை எடுக்க’ கோரினர்.
தேனி சுக்குவாடன்பட்டி பிரபாகரன் தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், ‘சுக்குவாடன்பட்டி பெருமாள்கோயில் தெருவில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். வீடுகளுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால், வீடுகளுக்கு செல்வதில் சிரமம் உள்ளது. பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்றிருந்தது.
அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவர், கண்டக்டராக பணிபுரிந்த பால்பாண்டி, பாலமுருகன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், ‘பெரியகுளம் டெப்போவில் தற்காலிக டிரைவர், கண்டக்டராக ஓராண்டிற்கு மேல் பணிபுரிந்தோம்.
திடீரென பணியில் இருந்து நிறுத்தினர். வேலையின்றி தவிக்கிறோம். தற்போது இப்பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில் டிரைவர், கண்டக்டர் என இரு லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என கூறி உள்ளனர். ஏற்கனவே பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,’ என கோரினர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு முகத்தில் காயத்துடன் பெண் ஒருவர் அழுது கொண்டே வந்தார். நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனர்.
அவர் கூறியதாவது, எனது பெயர் வீரசோலையம்மாள், பொம்மையகவுண்டன்பட்டி. கணவர் ஹரிஸ்வரனுடன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று வந்தேன்.
வழியில் என்னை தாக்கி கைக்குழந்தையுடன் கணவர் சென்றுவிட்டார் என்றார். அப்பெண்ணை மகளிர் போலீஸ் ஸ்டேஷனிற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
காத்திருந்த பொதுமக்கள் கலெக்டருடன் வாக்குவாதம்
குறைதீர் கூட்டத்திற்கு முன் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைஉயர் அதிகாரிகள் இருவர் பங்கேற்றனர்.
இக் கூட்டம் முடிய காலை 11:00 மணி ஆனது. இதன் பின்பு குறைதீர் கூட்டம் துவங்கியது.
இதனால் பொதுமக்கள் மனுக்கள் பதியும் இடத்திலும், வெளியிலும் நீண்ட நேரம் காத்திருந்தனர். சிலர் வரிசையில் நிற்காமல் உள்ளே புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரி உரிமையாளர்களுக்கு டிரான்ஸ்சிட் பாஸ் வழங்க மறுக்கும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமதியின்றி முறைகேடாக நடக்கும் குவாரிகள், கிரஷர்கள் மீது நடவடிக்கை வேண்டும், கேரளாவிற்கு கனிமங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
சில நிர்வாகிகள் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கூட்டரங்கில் இருந்து வெளியேற்றினர்.