தேனி நகராட்சியில் ரூ.10.58 கோடி வரி வசூலித்து சாதனை
தேனி : தேனி நகராட்சியில் வீட்டு வரி, குடிநீர், பாதாளசாக்கடை கட்டணம் என ரூ.10.58 கோடி வசூலித்து நுாறு சதவீத வரி வசூல் இலக்கை எட்டியுள்ளதாக கமிஷனர் ஏகராஜ் தெரிவித்தார்.
தேனி நகராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 6ஆயிரம் கடைகள் உள்ளனர். இது தவிர தலா 9ஆயிரம் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. நகராட்சி சார்பில் 250 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. கடந்தாண்டு பல்வேறு வகை வரிகள், வாடகை பாக்கி என மொத்தம் ரூ.12.26 கோடி வசூல் செய்ய வேண்டி இருந்தது. இதில் ரூ.10.40 கோடியை மார்ச் இறுதிக்குள் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வரி வசூல் செய்ய கமிஷனர் தலைமையில் வருவாய் பிரிவினர் தினமும் வீடுகள், கடைகளுக்கு சென்று வசூலை தீவிரப்படுத்தினர். கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர். சில வீடுகளில் வரி செலுத்த நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பொதுமக்கள் வரிகள், கட்டணங்களை செலுத்தினர்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் கூறுகையில், நிலுவை வரி, கட்டணங்கள் என ரூ.12.26 கோடி வசூலிக்க வேண்டி இருந்தது. இதில் ரூ. 10.40 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வரை ரூ.10.58 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’, என்றார்.