5.07 லட்சம் பேர் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு
தேனி: மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 5.07 லட்சம் பேர் கை விரல் ரேகை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சீனி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் ஏ.ஏ.ஒய்., ரேஷன் கார்டுகள் 35,874 உள்ளது. பி.எச்.எச்., கார்டுகள் 1.77 லட்சம், என்.பி.எச்.எச்., கார்டுகள் 2.19 லட்சம், இது தவிர போலீசார் ரேஷன் கார்டுகள், சீனி ரேஷன் கார்டுகள் என மொத்தம் 4.32 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்.,ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள 6.26 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய கூறப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 5.07 லட்சம் பேர் விரல் ரேகை பதிவு செய்துள்ளனர். இன்னும் 1.18 லட்சம் பேர் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
பதிவு செய்யாதவர்கள் எந்த மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வசித்தாலும் அருகில் உள்ள ரேஷன் கடையில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். மார்ச் 31க்குள் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.