தி.மு.க. , அரசு அகற்றப்பட வேண்டும்; வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல: தேனியில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேச்சு
தேனி: ”தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் தலையாய கடமை. வேறு யாரும், எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல,” என, தேனியில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேசினார்.
அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் எப்போதும் போட்டோ சூட் நடத்தி கொண்டே உள்ளார். ஒன்றும் செய்யாத பொம்மை முதல்வராக உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்திருந்தால் முல்லைப்பெரியாறு அணை 152 அடியாக உயர்த்திருப்போம். காவிரி குண்டாறு திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு விட்டது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொலை நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
இரு மாதங்களில் தமிழகத்தில் 185 கொலைகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக 273 வழக்குகள் பதிவாகியுள்ளன. போலீஸ் உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரியே பாதுகாப்பு இல்லை என கூறும் நிலை உள்ளது. சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்.
அண்ணா பல்கலை வழக்கில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி அந்த வழக்கில் இருந்து விலகி விட்டார்.
அரசு அதிகாரிகளை தி.மு.க.,வினர் மிரட்டுகின்றனர். பத்து ரூபாய் பாலாஜி இன்னும் திருந்தவில்லை. ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் ஆண்டுக்கு ரூ.3600 கோடி மேலிடத்திற்கு இன்னும் செல்கிறது.
துணை முதல்வர் உதயநிதி ரூ.நுாற்றுக்கணக்கான கோடி செலவழித்து கார் பந்தயம் நடத்துகிறார். இது அவசியமா. அரசு நிதியை ஊதாரியாக செலவிடுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு மண்டபம் அமைப்பது சரி. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் ரூ.80 கோடி செலவில் கடலில் சிலை வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.
பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் 73 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளன. இத்தனை ஆண்டுகளில் அரசின் மொத்த கடன் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடி. தி.மு.க., 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். அப்படி என்றால் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியை கடந்து கடன் வாங்கி விடுவர். புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கூடுதல் வருமானம் வந்தாலும் கடன்தான் வாங்குகின்றனர். பதவிக்கு வந்ததும் அறிவித்த 525 அறிவிப்புகளில் இதுவரை 90 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார்.
குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம், மாதந்தோறும் மின்கட்டணம் என கூறினர். தற்போது மின்கட்டணத்தை உயர்த்தி ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்வு அறிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் நாய், பூனை, குதிரைகளுக்கு வரி போட்ட பெருமை முதல்வர் ஸ்டாலினையே சேரும். இரு மொழிக் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
பா.ஜ.,வை கண்டு நாங்கள் நடுங்கவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது கருப்பு பலுான், குடை பிடித்தவர் ஆளுங்கட்சியாக மாறிய பின் வெள்ளை குடை பிடிக்கிறார். ஆளும் போது ஒன்று, எதிர்கட்சியாக இருக்கும் போது ஒன்று என தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.
தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் தலையாய கடமை. வேறு யாரும், எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என முதல்வர் கூறுகிறார்.
டில்லியில் அழுத்தம் கொடுத்து தேவையானதை பெற ஸ்டாலினுக்கு திறமை இல்லை. அ.தி.மு.க.,வின் மினிகிளினிக், லேப்டாப், பெண்கள் டூவீலர் திட்டங்களை நிறுத்தி விட்டனர்.
இவ்வாறு பேசினார்.