நிதி நெருக்கடியால் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறல்! நெசவாளர்களுக்கு நிலுவை தொகை வழங்காததால் சிரமம்
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 500 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருந்து இலவச சேலை, சீருடை துணிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேலைகள் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி திட்டத்தின் மூலம் அனுமதி வழங்கப்படும்.
உற்பத்தியான சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, பணம் கூட்டுறவு சங்கங்களின் கணக்கில் அரசு மூலம் வரவு வைக்கப்படும்.
அரசு மூலம் கிடைக்கும் தொகை தொடர்ந்து தொழிலை தொடரவும், நடைமுறை செலவினங்களுக்கும் பயன்படுத்தப்படும். அரசின் நிலுவைத் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை தொடர்ந்து நடத்த முடியாமல் நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.
கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் பணம் கையிருப்பு இருந்தால் வாரந்தோறும் உற்பத்தியான சேலைகளுக்கு கூலி கிடைக்கும். அரசு மூலம் கிடைக்க வேண்டிய தொகை தாமதமாவதால் நெசவாளர்களுக்கான கூலி கிடைப்பது இல்லை., என்றனர்.
கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் கூறியதாவது: மார்ச், ஏப்ரலில் கைத்தறி, பெடல் தறிகளில் 49 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சில தறிகளில் சீருடைத் துணிகள் உற்பத்தியும் நடந்து வருகிறது. ரூ.1.5 கோடி வரை அரசின் நிலுவைத் தொகை இருப்பதால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தொழில் செய்து வரும் நெசவாளர்களுக்கு அந்தந்த வாரம் கூலி வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நிலுவைத் தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு போதுமானதாக இல்லை. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நிலவும் நெருக்கடி குறித்து அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது., என்றனர்.