Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மாம்பூக்கள் பாசியாக மாறும் நிலையில் உதிர்ந்ததால் ஏமாற்றம்: மழையால் மகசூல் பாதிப்பு என விவசாயிகள் புலம்பல்

பெரியகுளம்: மா மரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்து, பாசியாக மாறும் நிலையில் மாசி மாதம் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்து, விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மகசூல் பாதிப்பால் விவசாயிகள் சோர்வடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், கம்பம் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடியாகிறது. பெரியகுளம் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக மா சாகுபடியில் பூப்பூக்கும் தருணத்தில் மழையும், பிஞ்சான நேரத்தில் அதிக காற்று என முரண்பாடான இயற்கை சூழல் நிலவுகிறது. மேலும் ‘செல் பூச்சி’ தாக்கத்தால் மா விளைச்சல் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. தற்போது காலத்து மாங்காய் எனும் முதல் போகத்தில் டிசம்பரில் மா மரங்களில் பூ பூக்கத் துவங்கி, ஏப்ரலில் அறுவடை துவங்கும். இந்தாண்டு ஜன., (தை மாதம்) மரங்களில் 80 சதவீதம் பூ பூத்தது. அந்த மாதத்தில் மழை இல்லாததால் 5 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல மகசூலுக்கான அறிகுறியாக விவசாயிகள் ‘நம்பிக்கை’ தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மா தோப்புகளில் மருந்து தெளிப்பு, பராமரிப்பினை உற்சாகமாக மேற்கொண்டனர்.

இந்நிலையில் மார்ச் 2வது வாரம் பெரியகுளம் பகுதியில் சாரல் மழை பெய்தது. இந்த மழை இலைகளில் வழிந்த பூக்களில் வெளியான ‘பிசினை’ உண்டு வாழும் செல்பூச்சிகள் உற்பத்தி கட்டுக்குள் வந்தது. சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் கனமழையாக மார்ச் 12ல் 27.2 மி.மீ., 22ல் 49.2 மி.மீ., என மாவட்டத்தில் அதிகபட்ச மழை பெரியகுளத்தில் பெய்தது. இதனால் மாம்பூக்கள் பிஞ்சாக மாறும் நிலையில் உதிரத்துவங்கியது.

மாசி மழையால் ஏமாற்றம்

வீரகேசவன், தென்கரை விவசாயிகள் சங்க தலைவர், பெரியகுளம். தை மாதம் மழை இல்லாததால்

மா மகசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மா மரங்களில் இலையே தெரியாத அளவிற்கு பூக்கள் பூத்து, 80 சதவீதம் பாசியாக, மிளகு அளவிற்கு திரண்டது. மாசியில் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்தும், செல் பூச்சிகள் தாக்கத்தால் 40 சதவீதமாக குறைந்தது.

விவசாயிகள் 5 முதல் 10 மருந்துகள் அடித்து வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு பின் நல்ல விளைச்சல் கிடைக்கும் என நினைத்தோம். தற்போது அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மா விவசாயிகளுக்கு மானிய விலையில் மருந்து வழங்க வேண்டும்.

ஐந்தாண்டுகளாக மா விவசாயிகளுக்கு ‘குடைச்சல்’ தரும் செல்பூச்சிகளை ஒழிக்க மருந்து கண்டறிய வேண்டும்.

தோப்புகளில் காட்டுமாடுகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க வனத்துறை மாடுகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *