7 ஆண்டுகளாக நடைபெறாத கம்பம் ஆனித் தேரோட்டம் நடத்த வேண்டுகோள்
கம்பம்: கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாத கம்பம் கம்ப ராயப் பெருமாள் கோயில் ஆனித் தேரோட்டத்தை இந்தாண்டு நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித் தனி சன்னதிகள் உள்ள சிறப்பு பெற்ற தலமாகும்.
இக் கோயிலின் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆனியில் நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் தேரோட்டம், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டு தேரோட்டம் தொடர்ந்து நடைபெறாமல் போய் வருகிறது.
கடந்த 2003 ல் நடந்த தேரோட்டம், 14 ஆண்டுகளுக்கு பின் 2017 ல் நடந்தது.
அதன் பின் 7 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. மூன்று நாட்கள் நடக்கும் தேரோட்ட நிகழ்வுகள் 10 நாட்கள் வரை நடைபெறும்.
அனைத்து சமுதாய மக்களும் ஒவ்வொரு நாளும் மண்டகப்படி நடத்துவார்கள். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘கம்பத்தில் ஏழு ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டி தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கிற்கும், தேரோட்டம் நடைபெறுவதற்கும் சம்பந்தம் இல்லை. அப்படியே இருந்தாலும் கோர்ட்டின் அனுமதி பெற்று நடத்த வழிவகைகள் உள்ளன.
எனவே கம்பம் ஆனித் தேரோட்டத்தை இந்தாண்டு நடத்த ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.