கள்ளக்காதல் தகராறை தடுக்க சென்ற வாலிபர் கொலை; இன்ஜினியர், நண்பருக்கு ஆயுள்
தேனி; கள்ளக்காதல் தகராறை தடுக்க சென்ற வாலிபரை கொலை செய்த வழக்கில் இன்ஜினியர் பிரவீன், உடந்தையாக இருந்த நண்பர் தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனிமாவட்டம் டொம்புச்சேரி கிழக்குத்தெரு எலக்ட்ரீசியன் ராஜா 33. இவரது அண்ணன் மருதமுத்து 36. இவரது மனைவி வீரலட்சுமி 32.
இவரும் அதேபகுதியில் வசித்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பிரவீன் 24, என்பவரும் நெருக்கமாக பழகினர். இதனை ஊர் பெரியவர்கள் மூலம் பேசி தீர்வு கண்ட பின்பும் வீரலட்சுமி, பிரவீன் நெருக்கம் தொடர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மருதமுத்து, பிரவீனுடன் அடிக்கடி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் 2023 ஆக. 26ல் டொம்புச்சேரி சமுதாயக்கூடம் அருகே மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மருதமுத்துவை தினேஷ்குமார்27, பிடித்துக்கொள்ள, பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். எதிர்பாராதவிதமாக தகராறை தடுக்க வந்த ராஜாவை, பிரவீன் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ராஜா இறந்தார்.
பழனிசெட்டிபட்டி போலீசார் கொலை வழக்கில் பிரவீன், தினேஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இதில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.