தேனி நகராட்சியில் புரோக்கர்கள் nதொல்லை: பொதுமக்கள் அதிருப்தி
தேனி: தேனி நகராட்சியில் புரோக்கர்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தேனி நகராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
நகராட்சி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, சொத்துவரி, தொழில்வரி, புதிய கட்டடங்களுக்கு அனுமதியளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.வரி செலுத்துதல், கட்டட அனுமதி, நமக்கு நாமே திட்டம், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல்வேறு பிரச்னைக்கு தீர்வு கோரி பொதுமக்கள் நகராட்சியில் மனு அளிக்க வருகின்றனர்.
அவர்களிடம் ஆளும் கட்சி பிரமுகர்களின் பெயரை கூறி அறிமுகமாகும் புரோக்கர்கள் பொதுமக்கள் நேரிடையாக அதிகாரிகளிடம் சென்றால் இழுத்தடிப்பு, வீண் அலைச்சல் ஏற்படும் என மக்களை குழப்புகின்றனர்.
பின்னர் குறிப்பிட்ட தொகை வழங்கினால் காரியத்தை கச்சிதமாக முடித்து தருவதாக கூறி மனுவை பெறுகின்றனர். அம் மனுவை நேரடியாக அதிகாரிகளிடம் கொண்டு சென்று, வேலையை முடித்து தர நச்சரிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள், அதிகாரிகள் அவதியடைகின்றனர்.
பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதி கவுன்சிலர்களிடம் இதுபற்றி தெரிவிக்கின்றனர்.
கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டாலும் சரியான பதில் தருவதில்லை என கவுன்சிலர்களும் புலம்புகின்றனர்.
ஆளும் கட்சி பெயரை கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் புரோக்கர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.