எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுறாதீங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
”கல்வி தான் நம் ஆயுதம்; எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக்கூடாது” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளையும், சான்றிதழ்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்களின் திறனை மேம்படுத்தவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கல்வி தான் நம் ஆயுதம்; எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக்கூடாது. தமிழகத்திற்கென அறிவு முகம் இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தனி மதிப்புள்ளது. எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும் நமது மாணவர்கள் வெற்றி பெறவே நான் முதல்வன் திட்டம். அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.
மக்களின் மனதில் நாம் இடம்பெற வேண்டும். மக்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டும். உங்களுக்கு ரோல் மாடல் ஆக பலர் இருந்திருப்பார்கள்; இனி நீங்கள் பலருக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்று நீங்க பணியாற்றினாலும், சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களின் உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.