Friday, July 18, 2025
தமிழக செய்திகள்

அமெரிக்காவில் அண்ணாமலை: டெஸ்லா நிறுவனத்துக்கு ‘விசிட்’

அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டார்.

தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை இமயமலைக்கு சென்று இருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில், இந்தியா – அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி குறித்து நிபுணர்கள் கலந்து ஆலோசித்தனர். அந்தவகையில், அவர் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பரபரப்பு அறிக்கை

இதற்கிடையே, நேற்றிரவு செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவி பறிப்பு குறித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

வேறு வழியின்றி, தி.மு.க., அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.

ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடிக்கும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன.

தி.மு.க.,வின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், தி.மு.க.,வின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *