இந்திய ராணுவத்திற்கு தமிழக தலைவர்கள் பாராட்டு
இந்திய ராணுவம், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்ததற்கு, கவர்னர் ரவி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது:
கவர்னர் ரவி: பாரதத் தாய் வாழ்க. ஆப்ரேஷன் சிந்துார். இது வெறும் தொடக்கம்தான்.
முதல்வர் ஸ்டாலின்: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், தமிழகம் இந்திய ராணுவத்துடன் நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நமது போர் பயங்கரவாதிகளுக்கு எதிரானது என தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ ஐ வெற்றிகரமாக முடித்த, நம் இந்திய ராணுவத்தின் தீரம் பெருமைக்குரியது. இத்தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: காஷ்மீர் பஹல்காமில் நடந்த மனிதத் தன்மையற்ற, கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, ‘ஆப்பரேஷன் சிந்துாரை’ துவக்கியது நம் ராணுவம். பாரத நாட்டை, அன்னிய சக்திகளிடம் இருந்து காக்கும் வலிமை பெற்றவரான பிரதமர் மோடிக்கும், ராணுவத்தின் முப்படைகளுக்கும் நன்றி. பயங்கரவாதத்தை அழிக்கும், மத்திய அரசின் வேள்வியில், நாமும் பங்கேற்போம்.
தமிழக பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை: பயங்கரவாதத்தால் சிதைந்த, நம் இந்தியருக்கு நீதி கிடைக்க, பாகிஸ்தானின் பயங்கரவாதி பதுங்கு குழிகளை, இந்தியா சிதைத்து இருக்கிறது. பயங்கரவாதிகளின் குருதியினால் சிகப்பானது, நம் காஷ்மீரத்து வெள்ளை ரோஜாக்கள். இனி காஷ்மீர் அமைதி பூங்காவில், வெள்ளை ரோஜாக்களே மலரும்.
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்ததால், பெண்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் குறிக்கும் வகையில், ‘சிந்துார்’ என்ற பெயர் இடம் பெற்றிருப்பது மிகவும் பொருத்தமானது. மத்திய அரசின் ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலால், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. முப்படைத் தளபதிகளின் திறமைக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: பெருமைமிக்க இந்தியா, தன் ஆயுதப்படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாத செயல்களால் பிரிக்கப்படாத, ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் ராணுவ நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி கொண்டிருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும், மக்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.
த.வெ.க., தலைவர் விஜய்: இந்திய ராணுவத்துக்கு ராயல் சல்யூட்.
நடிகர் ரஜினி: போராளியின் யுத்தம் துவங்குகிறது. பணி நிறைவேறும்வரை ஓய வேண்டாம். மொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்.
அதேபோல, நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இந்திய ராணுவத்தினர் பாக்.,கில் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.