தேச துரோக கருத்துக்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை; பா.ஜ.,வினர் எஸ்.பி.,யிடம் புகார்
‘தேச துரோக கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, தேனி பா.ஜ., மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தேனி எஸ்.பி.,சிவபிரசாத்திடம் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பை மக்கள் பொது வெளியில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நடந்த சம்பவத்தை திசை திருப்பும் நோக்கத்தில் சிலர் சேதத்திற்கு எதிராக மத்திய அரசு, ராணுவத்தின் மீதும் தவறான கருத்துக்களை திட்டமிட்டு சமூக வலை தளங்களில் பதிவேற்றுகின்றனர்.
இது ராணுவத்தை களங்கப்படுத்தும் செயல். இவ்வாறு தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளிநாட்டினர் நடமாட்டம் உள்ளது. அவர்களை விசாரித்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.