தேவை அதிகரிப்பால் நுங்கு, இளநீர் விலையை உயர்த்தும் வியாபாரிகள்
கோடையின் தாக்கத்தால் நுங்கு, இளநீர் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பால் தட்டுப்பாடு இருப்பதாக கூறி வியாபாரிகள் இவற்றின் விலையை உயர்த்தி விட்டனர்.
கடந்த இரு மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் கத்தரி வெயிலும் துவங்க இருப்பதால் வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாக்க குளிர்பானங்கள், குளிர்ச்சி தரும் இயற்கை பொருட்களுக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே கொய்யா, பலா, மாம்பழம், சப்போட்டா, தர்பூசணி, முலாம்பழம், திராட்சை, ஆரஞ்சு பழங்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. இளநீர் பயன்பாடு ஆண்டு முழுவதும் இருந்தாலும் கோடையில் தேவை அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும் நுங்கு விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது. ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களின் விலை கோடையில் சற்று கூடுதலாகிறது. ஆனால் இந்த ஆண்டு கோடையில் நுங்கு, இளநீர் விலை உயர்வு அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு நுங்கு 10 ரூபாய்க்கு கிடைப்பதில்லை. ரூ.50க்கு 4, ரூ.100க்கு 8 நுங்கு என்று கிராக்கியுடன் விற்பனை செய்கின்றனர். தேனி மாவட்டத்தில் தென்னை விளைச்சல் அதிகம் இருந்தாலும் ஒரு இளநீர் விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. சாதாரண மக்களுக்கு நுங்கு, இளநீர் ஆகியவை எட்டா கனியாகி வருகிறது. நுங்கு, இளநீர் விலை உயர்வு, விளைவிக்கும் விவசாயிகளுக்கு பயன் தருகிறதா அல்லது வியாபாரிகளுக்கு பயன் தருகிறதா என்பது குறித்து அரசு ஆய்வு மேற்கொண்டு இவற்றின் விலைகள் கட்டுக்குள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.