சுற்றுலா வாகனங்கள் விபத்து: தமிழக பயணிகள் உள்பட 13 பேர் காயம்
மூணாறு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சுற்றுலா வாகனங்கள் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 13 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கேரளா, திருச்சூர் மாவட்டம் மாளா, சாலக்குடி, அஷ்டமிச்சரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் கொண்ட குழு மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று மூணாறு அருகே மாங்குளம் பகுதியில் இரண்டு ஜீப்புகளில் சாகச பயணம் சென்றனர். அந்த ஜீப்புகளில் ஒன்று ஆனக்குளம், கோழியிலக்குடி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் மாங்குளத்தைச் சேர்ந்த ஜீப் டிரைவர் அபிஜித் 25, சாலக்குடியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கரன் 25, அஜய்ஹைமல் 51, சதீஷ் 45, ரேகா 52, நந்தகுமார் 56, மீனாட்சி 22, ஆதித்யன் 30, விஸ்வநாத் 78, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல் தமிழகம் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட 14 பேர் கொண்ட குழு மினி வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். மூணாறு அருகே பைசன்வாலி, டீ கம்பெனி பகுதியில் நேற்று காலை வந்தபோது வளைவில் திரும்பிய வேன் திடிரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. அதில் நான்கு பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.