காஷ்மீர் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., (பாக்., உளவு அமைப்பு) மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது. தேசிய புலனாய்வு படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை தொடர்பாக தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும் பின்புலத்தில் இருந்து உதவி புரிந்துள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கை விபரம் கசிந்துள்ளது. இதில் பாகிஸ்தானின் சதி அம்பலமாகியுள்ளது. NIA-வின் ஆரம்ப அறிக்கை பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்த தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தலைமையகத்தில் சதி திட்டமிடப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (POK) சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்பில் இருந்தனர். பாகிஸ்தானிடமிருந்து வழிகாட்டுதலையும் நிதியையும் பெற்றுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாக்., ஆக்கிரமிப்பு கார்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். முக்கிய பயங்கரவாதிகள் ஹாஷிம் மூசா மற்றும் அலி என்கிற தல்ஹா பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள். இருவருக்கும் காஷ்மீரில் வசிக்கும் அடில் தோகர் என்பவர் உதவியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு தளவாடம் வழங்குதல், தகவல், திரட்டி கொடுத்தல், உள்ளூர் பகுதிகள் குறித்த அடையாளம் தெரிவித்தல் மற்றும் பதுங்கு இடங்கள் உள்ளிட்டவற்றை உள்ளூர்வாசிகள்தான் வழங்கியுள்ளனர்.
பஹல்காம் விசாரணையில் 150க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒத்துழைப்பாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைககள் துவங்கியுள்ளது.பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் உட்பட தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன. இது தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு படை இயக்குநர் ஜெனரல் (DG) தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் ஆதாரங்களை வழங்கப்படும். தொடர்ந்து
பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.