Saturday, May 3, 2025
தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

‘இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா,’ என்று ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை; ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி – பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, ‘சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது’ என்று பெருமை பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?

தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியல் இடுகிறேன்.

1 மே 2022 – ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.

9 செப்டம்பர் 2023 – ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

29 நவம்பர் 2024 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

13 மார்ச் 2025 – திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

14 ஏப்ரல் 2025 – ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை ‘தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்’ என்பதற்கு இந்த தி.மு.க., அரசுக்கு வெட்கமாக இல்லையா?தமிழக மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இந்த கொலை, கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *