Saturday, May 3, 2025
தமிழக செய்திகள்

இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை

‘தி.மு.க., அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இனியும் முதல்வர் இதனை மூடி மறைக்க முயன்றால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை,’ என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023ம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?

பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?

தி.மு.க., அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டு மொத்த வழக்குகளையும் சி.பி.ஐ.,க்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதல்வர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28ம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து 150 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *