வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவக்கம்; 270 அதிநவீன கேமராக்கள் பொருத்தம்தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவங்கிறது. திருவிழாவை முன்னிட்டு 270 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவங்கிறது. திருவிழாவை முன்னிட்டு 270 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இக்கோயிலின் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவிற்காக ஏப்.16ல் கம்பம் நடுதல் விழா நடந்தது. தினமும் பக்தர்கள் முல்லைப் பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். அதே போல் ஆயிரம் கண்பானை உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். சித்திரை திருவிழா நாளை (மே.6ல்) வீரபாண்டியில் உள்ள கோயில் வீட்டில் இருந்து அம்மன் மலர் வாகனத்தில் கோயிலுக்கு வரும் நிகழ்வுடன் துவங்கிறது.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 9ல் நடக்கிறது. மே 12ல் தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், மே 13ல் ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவடைகிறது.
பாதுகாப்பு, கண்காணிப்பு பணிக்காக அறநிலையத்துறை, போலீசார் சார்பில் ஆற்றங்கரைகள், ராட்டினம் மைதானம், கோயில் வளாகம், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 270 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. போலீஸ், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை சார்பில் தற்காலிக முகாம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.