மலர் கண்காட்சியை ரசித்த 20 ஆயிரம் பயணிகள்
கேரள மாநிலம் மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் மே 1ல் துவங்கிய மலர் கண்காட்சியை கடந்த நான்கு நாட்களில் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
மூணாறில் ஆண்டுதோறும் கோடையில் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இடுக்கி மாவட்டச் சுற்றுலாத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு மாவட்டச் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் இக்கண்காட்சி மே 1ல் துவங்கியது.
அங்கு வெளி நாடுகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உட்பட 1500 வகை வண்ணமயமான பூக்கள் உள்ளன. அவற்றை கடந்த நான்கு நாட்களில் 20 ஆயிரம் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
பகலில் வண்ண பூக்களால் அழகு படுத்தப்பட்டுள்ள பூங்கா இரவில் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலான இசைக்கு நடனமாடும் நீரூற்று, ‘மியூசிக்கல் பவுண்டன்’ உட்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை பூங்கா கவர்ந்து வருகிறது. காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை பூங்காவை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50. மே 10ல் மலர் கண்காட்சி நிறைவு பெறுகிறது.