தேச பக்தி என்பது ரத்தத்தில் ஊறியது
தேச பக்தி என்பது ரத்தத்தில் ஊறியது: ஆசிரியை பணியை துறந்த கர்னல் சோபியா; வானத்தின் மகளான பைலட் வியோமிகா
பாகிஸ்தானுக்கு எதிரான, ஆபரேஷன் சிந்துார் ராணுவ நடவடிக்கையை நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விவரித்தார். அப்போது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது ஹிந்தியில் விளக்கியவர், ராணுவ அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி. அதேபோல், ஆங்கிலத்தில் விளக்கியவர் விங் கமாண்டர் வியோமிகா சிங்.
வழக்கமாக, பத்திரிகையாளர்களிடம் இது போன்ற ராணுவ கலந்துரையாடல்களை நடத்துவது சீனியர் அதிகாரிகளாக இருப்பர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, பெண் அதிகாரிகள் ராணுவ நடவடிக்கையை விளக்கியது, ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
இந்த அதிகாரிகள் யார்?
கர்னல் சோபியா
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் கர்னல் சோபியா குரேஷி. இவரது தந்தை தாஜுதீன் குரேஷி. ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சோபியாவின் தாத்தாவும் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். தேசபக்தி என்பது இவர்கள் ரத்தத்தில் ஊறியது.
சோபியா எம்.எஸ்சி., உயிரி அறிவியல் முடித்து, கல்லுாரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்தார். பி.எச்டி.,யும் படித்து வந்தார்.
எனினும் அவருக்கு ஆசிரியர் பணியில் விருப்பம் இல்லை. தந்தை, தாத்தாவை போல், ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற விரும்பினார். மத்திய அரசின் ராணுவப் பணிக்கான தேர்வு எழுதி, ராணுவத்தில் சேர்ந்தார். இவரது கணவரும் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
தற்போது கர்னலாக பதவி வகித்து வரும் சோபியா, 2006ம் ஆண்டு முதல், ஐ.நா., அமைதிப்படையில் நியமிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் காங்கோவில் பணியாற்றினார். 2016ம் ஆண்டு ஆசியன் பிளஸ் நாடுகளுக்கான பன்னாட்டு ராணுவ பயிற்சியில், இந்தியா சார்பில் பங்கேற்றார்.
‘போர்ஸ் 18’ எனப்படும் இந்த 18 நாடுகளின் ராணுவ பயிற்சியில் பங்கேற்ற ஒரே பெண் கமாண்டர் சோபியா என்பது குறிப்பிடத்தக்கது.
விங் கமாண்டர் வியோமிகா சிங்
கடந்த 1990களின் துவக்கத்தில் ஒரு நாள்… ஆறாம் வகுப்பு மாணவியாக இருந்தார்,
வியோமிகா. வகுப்பில் தங்கள் பெயர்கள் குறித்து மாணவர்கள் விளக்கம் அளிக்க, ஒரு மாணவர், ‘வியோமிகா என்றால் வானத்தின் மகள் என அர்த்தம்’ என கூறினார். அப்போதே தான் ஒரு பைலட் ஆக வேண்டும் என விரும்பினார் வியோமிகா சிங்.
அவரது கனவு நனவானது. இன்ஜினியரிங் படித்த அவர், பின்னர் தான் விரும்பியவாறே இந்திய விமானப்படையில் சேர்ந்து, தற்போது விங் கமாண்டராகி உள்ளார். 2019ல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.
காஷ்மீர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் போன்ற சிக்கலான பகுதிகளில் கூட ராணுவ நடவடிக்கைகள், இயற்கை இடர்பாடுகளின்போது, சேதக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை ஒட்டி, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.