உலக அமைதிக்கு வழி வகுக்கும்: பிரதமர் மோடி உறுதி
”புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். உண்மை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பகவான் புத்தரின் வாழ்க்கை மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றன.
தியாகம் மற்றும் தவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, உலக சமூகத்தை எப்போதும் அமைதியை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: புத்த பூர்ணிமாவின் புனிதமான நாளில், அமைதி, ஞானம் கிடைக்க புத்தரை நான் வணங்குகிறேன். அவரது போதனைகள் மனிதகுலத்தை நல்லிணக்கம் மற்றும் நீதியின் பாதையை நோக்கி தொடர்ந்து வழிநடத்துகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரக்கம், கருணை!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: அகிம்சையையும், கருணையையும் போதித்த புத்தர் பெருமான் பிறந்த புத்த பூர்ணிமா தினம் இன்று. புத்தர் பெருமானின் போதனைகள், அனைவருக்கும் இரக்கம், கருணை மற்றும் அன்பு நிறைந்த வாழ்க்கையை அருளட்டும்.
புத்தரின் ஆசிகள் எப்போதும் அனைவருக்கும் இருக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.