உலக நாடுகளிடம் கையேந்தும் பாகிஸ்தான்; வலைதளம் முடக்கப்பட்டதாகவும் புலம்பல்
இந்திய ராணுவத்தின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிக்கட்ட நிதியுதவி அளிக்கும்படி, உலக நாடுகளிடம் சமூக வலைதளம் வாயிலாக பாகிஸ்தான் கையேந்துகிறது. எனினும், சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகவும் புலம்புகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக, பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒன்பது இடங்களில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது.
கடன் உதவி
இதையடுத்து, நேற்று முன்தினம் நம் நாட்டின் எல்லையோரங்களில் ட்ரோன் தாக்குதலை பாக்., துவங்கியதால், நம் முப்படையினரும் பாக்.,கின் முக்கிய நகரங்களில் தீவிரமாக தாக்கி வருகின்றனர். பாக்., பிரதமர் ஷபாஸ் ஷெரீப், பதுங்கு குழியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாக்., பொருளாதார விவகாரப் பிரிவின், ‘எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் நேற்று காலை ஒரு பதிவு போடப்பட்டது. அதில், ‘அதிகரித்து வரும் போர் பதற்றம், எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்பு, பங்குச் சந்தை வீழ்ச்சி போன்ற காரணங்களால், சர்வதேச நட்பு நாடுகளிடம் பாக்., அரசு கூடுதல் கடன் உதவியை கேட்கிறது.
பொருளாதாரத்தில் பாக்., தொடர்ந்து உறுதியாக இருப்பதற்கு உதவும்படி கேட்கிறது’ என குறிப்பிட்டிருந்தது. மேலும், அந்த பதிவை உலக வங்கிக்கு ‘ஹேஷ் டேக்’ செய்தும் போடப்பட்டது. ஏற்கனவே, போர் காரணமாக, பாக்., பங்குச் சந்தை வரலாறு காணாத விதமாக 7.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 6,000 புள்ளிகள் சரிந்தன.
இதற்கிடையே, பாக்.,குக்கு 59,779 கோடி ரூபாய் கடன் அளிப்பதாக கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது. அதன் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கான கூட்டம் விரைவில் நடைபெறுகிறது. அதில், கூடுதலாக 17,000 கோடியை கேட்க பாக்., திட்டமிட்ட நிலையில், இந்த கோரிக்கை உலக நாடுகளின் பார்வையில் பாக்., மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கிண்டல்
ஆனால், அந்த பதிவை தாங்கள் போடவில்லை என மறுப்பு தெரிவித்த பாக்.,கின் பொருளாதாரப் பிரிவு, தங்களுடைய ‘எக்ஸ்’ வலைதள கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. பாக்.,கின் இந்த பல்டியை பார்த்து, பி.ஐ.பி., எனப்படும் நம் நாட்டின் பத்திரிகை தகவல் ஆணையம் கிண்டல் அடித்துள்ளது.
பி.ஐ.பி., தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘கோல்மால்’ என்ற ஹிந்தி படத்தின் நகைச்சுவை காட்சியை பகிர்ந்ததோடு, ‘இதுதான் பிச்சை எடுக்கும் முறையா’ என்ற கேள்வியையும் பதிவிட்டுள்ளது.