போரில் வெற்றி பெற்றதாக பாக்., தம்பட்டம்; ‘ராணுவத்துக்கு நன்றி’ என கொண்டாட்டம்
இரு நாடுகளுக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், போரில் வெற்றி பெற்றதாக கூறி, ‘ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் தினம்’ என்ற பெயரில், பாகிஸ்தான் தம்பட்டம் அடித்து நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
ஜம்மு – -காஷ்மீரின் பஹல்காமில், 26 பேரை பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற ராணுவ நடவடிக்கையை துவங்கிய நம் நாடு, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை தகர்த்தது; 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்தியாவுடன் பாக்., ராணுவம் மோதலில் ஈடுபட்டதால், இரு தரப்பிலும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் தொடர்ந்தது. இந்தியா மீதான தாக்குதலுக்கு, ‘இரும்பு சுவர்’ என்ற பொருள்படும் வகையில் பாக்., பெயர் சூட்டியது.
மூன்று நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில், பாக்.,கில் இருந்து நீண்ட தொலைவு ஏவுகணைகள் ஏவப்பட்ட ஆறு முக்கிய விமானப்படை தளங்கள் மற்றும் இரண்டு ரேடார் மையங்களை நம் படையினர் நேற்று முன்தினம் காலையில் தகர்த்தனர்.
இதையடுத்து, பிற்பகலிலேயே போரை நிறுத்த பாக்., இறங்கி வந்தது. இதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இந்தியாவும் ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த போரில் வெற்றி பெற்று விட்டதாக பாக்., கூறி வருகிறது. அந்நாட்டு அரசு வானொலியான ‘ரேடியோ பாகிஸ்தான்’ வாயிலாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் செய்தி வாசிக்கப்பட்டது.
அதில், ‘இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு ஆப்பரேஷன் இரும்புச் சுவர் வாயிலாக தகுந்த பதிலடி கொடுத்த ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றி தினம், நாடு முழுதும் மே 11ல் கொண்டாட பிரதமர் ஷெரிப் அழைப்பு விடுத்துள்ளார்.
கடவுளுக்கும் பாக்., ராணுவத்தின் இணையில்லா துணிச்சலுக்கும் நன்றி செலுத்துவதோடு, போரில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தும்படி, மத குருமார்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்’ என கூறப்பட்டது.
இதன்படி, போரில் வெற்றி பெற்றதாக கூறி, பாகிஸ்தானில் நேற்று கொண்டாட்டங்கள் நடந்தன. பாக்.,கின் பஞ்சாப், சிந்து உள்ளிட்ட கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் பாக்., கொடிகளை ஏந்தியபடி பலர் வீதிகளில் சென்றனர்.
சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாதில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். போர் நிறுத்த அறிவிப்பையே, வெற்றி பெற்றதாக கொண்டாடி வரும் பாக்.,கின் செயல், உலக நாடுகளால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.
அமைதி பேச்சுவார்த்தை
போர் நிறுத்தம் தொடர்பாக, அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்தியா – பாக்., இடையிலான நீண்டகால பிரச்னைகளான நீர்வளப் பகிர்வு, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்டவற்றை தீர்ப்பதற்கு, அமைதி பேச்சுக்கான வழியை ஏற்க வேண்டும். பிராந்திய நலனுக்காக இந்தியாவுடன் ஏற்பட்ட புரிந்துணர்வை பாக்., நேர்மறையாக அணுகும். இக்கட்டான தருணத்தில் துணை நின்ற, நம்பகமான நண்பரான சீனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும், அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரெட் உள்ளிட்ட நாடுகளின் தலைமைகளுக்கும் நன்றி,” என கூறினார்.
இதுபோல, பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறுகையில், “போர் நிறுத்தம் வாயிலாக அமைதி பேச்சுக்கான பாதை திறந்ததாக கருதுகிறோம். எனவே, மூன்று முக்கிய பிரச்னைகளான காஷ்மீர், பயங்கரவாதம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஆகியவை குறித்து, எதிர்கால பேச்சின்போது விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது,” என்றார்.