நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புடின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் உக்ரைன் அதிபர்
”போர் நிறுத்தம் தொடர்பாக, துருக்கியில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று, ”அமைதியை நோக்கி செல்வதற்கான தீவிர பேச்சுவார்த்தை நடத்த தயார். மே 15ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம்” என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தது இருந்தார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் அழைப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். இது குறித்து, ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராஜதந்திரத்திற்குத் தேவையான அடிப்படையை வழங்க, நாளை முதல் தொடங்கும் முழுமையான மற்றும் நீடித்த போர்நிறுத்தத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
மே 15ம் தேதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம். இந்த முறை சாக்குப்போக்குகளைத் தேட மாட்டார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.