அலைபேசி ‘டார்ச்’ ஒளியில் பச்சை குத்தும் இளைஞர்கள்; சுகாதாரத்துறை ஆய்வு அவசியம்
வீரபாண்டி சித்திரைத் திருவிழாவில் பச்சை குத்தும் கடைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் ஊசிகள் முறையாக மாற்றப்படுகிறதா என, மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இத்திருவிழாவில் தினமும் இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே போல் உணவு விற்பனை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், ராட்டின மைதானங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்தாண்டு பச்சை குத்தும் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
இதில் பெரும்பாலான கடைகளில் இரவு நேரத்தில் ‘லைட்’ வசதி இல்லை. இந்த கடைகளில் அலைபேசி ‘டார்ச்’ ஒளியை பயன்படுத்தி இளைஞர்கள் பச்சை குத்துகின்றனர்.
பச்சை குத்துவதற்கு அதிக இளைஞர்கள் காத்திருப்பதால், குறைந்த விளக்கொளியில் அவசர கதியில் பச்சை குத்துகின்றனர்.ஊசிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல், மாற்றாமல் பச்சை குத்தினால், உடலில் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும். இந்த கடைகளில் சுகாதாரம் முறைப்படுத்தப்பட்டு உள்ளதா என சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விழிப்புணர்வு தேவை
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘பச்சை குத்தும் போது ஊசி மாற்றமல் இருந்தால் எச்.ஐ.வி., பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
பச்சை குத்தியிருந்தால் ஓராண்டிற்கு ரத்த தானம் வழங்க முடியாது. பச்சை குத்தும் போது நரம்புகளில் ஊசிகள் பட்டால் பின் விளைவுகள் ஏற்படலாம். இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.’,என்றார்.