தேனி மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுப்பாடு! புதிய மூன்று நுழைவு வாயில்களில் காவலர்கள் நியமனம்
தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தி உள்ளனர். விடுதிகள் உள்ள பகுதி, ஆயுஷ் ஒருங்கிணைந்த மருத்துவமனை நுழைவுப் பகுதி, டீன் அலுவலகத்தில் இருந்து, வகுப்பறைளுக்கு செல்லும் பகுதி நுழைவு வாயில்களில் காவலர்கள் நியமித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2004ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துவக்கப்பட்டது. இங்கு 21 பாடங்களுக்கான நவீன வசதிகளுடன் வகுப்பறைகள் இயங்கிவருகிறது. இளங்கலை மருத்துவத்தில் 500 மாணவர்கள், முதுகலை படிப்பில் 210 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மாணவ, மாணவிகள் விடுமுறை தினங்கள் தவிர கல்லுாரி நாட்களிலும், இரவில் கார்கள், டூவீலர்களில் வெளியே சென்று, உரிய நேரத்திற்கு வராமல் தாமதமாக விடுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. உரிய நேரத்தில் விடுதியில் மாணவர்கள் இருப்பது அவசியம். இதனை கண்காணிக்க கல்லுாரி கண்காணிப்பாளர் டாக்டர் விஜயானந்த், டீன் டாக்டர் முத்துசித்ரா, மருத்துவ அலுவலர்கள், மருத்துவ மாணவர் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து புதிய கட்டுப்பாட்டுகள் விதித்துள்ளனர். அனுமதியின்றி முதுகலை, இளங்கலை மாணவர்கள் கல்லுாரியை விட்டு வெளியே செல்லக்கூடாது. விடுமுறை தினங்களில் மட்டும், பெற்றோருடன் கல்லுாரி கண்காணிப்பாளர் அனுமதியுடன் வெளியில் செல்ல அனுமதி உண்டு. பெற்றோர், உறவினர்கள், சந்திப்பு விபரங்களை காவலாளிகள் குறிப்பெடுக்க வேண்டும். இரவில் வெளியில் சென்று, நள்ளிரவில் கல்லுாரி திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந் நடைமுறையை தொடர்ந்து வகுப்பறைகள் செல்லும் டீன் அலுவலகம் அருகே உள்ள பகுதி, மாணவர் விடுதி பகுதி, ஒருங்கிணைந்த ஆயூஷ் மருத்துவமனை நுழைவு வாயில் என 3 இடங்களில் புதிய இரும்பு ‘கேட்’கள் அமைக்கப்பட்டு, நுழைவு வாயில்களில் காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந் நடவடிக்கை குறித்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.