போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை : கூடலுார் புறவழிச்சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
கூடலுார்: சபரிமலைசீசன் காரணமாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடலுார் புறவழிச்சாலையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். டிச.26ல் மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகரஜோதி விழா துவங்குகிறது.
தற்போது சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு தேனி மாவட்டத்தில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கோயிலுக்கு செல்லும்போது கம்பம், கம்பம் மெட்டு, ஏலப்பாறை, குட்டிக் கானம் வழியாகவும், திரும்பி வரும் பக்தர்கள் வண்டிப்பெரியாறு, குமுளி வழியாகவும் அனுமதிக்கப்படுகிறது.
சுருளி அருவி வரும் பக்தர்கள் கவனத்திற்கு:
ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு முன் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவிக்கு சென்று குளித்தபின், அங்கிருந்து கூடலூர் வழியாக குமுளி நோக்கி செல்கின்றனர்.
ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கூடலுார் புறவழிச்சாலையில் போலீசார் அதிகம் குவிக்கப்பட்டு பக்தர்களின் வாகனங்களை மீண்டும் கம்பம் மெட்டு வழியாக செல்ல திருப்பி விடுகின்றனர்.
இதனால் சுருளி அருவி செல்லும் பக்தர்கள் கூடலுார் வழியாக வராமல் கம்பம், கம்பம் மெட்டு வழியாக செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இருந்த போதிலும் உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி. க்களின் பரிந்துரையில் வரும் பக்தர்களின் வாகனங்களை தடுக்க முடியவில்லை.