போடி அருகே ஐடி ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை ‘அபேஸ்’
போடி அருகே ஐடி ஊழியர் வீட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள தேவாரம் சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). ஐடி கம்பெனி ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். சில்லமரத்துப்பட்டியில் உள்ள இவரது வீட்டிற்கு மணிகண்டன் என்பவர் காவலாளியாக உள்ளார்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் இரவு, மணிகண்டன் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நேற்று முன் தினம் காலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீட்டின் உரிமையாளரான கார்த்திக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சென்னையிலிருந்து வந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்