100 டன் பசுந்தாள் உர விதை அனுமதி விவசாயிகள் வாங்க ஆர்வம் இல்லை
கம்பம், நெல் சாகுபடி வயல்களில் பசுந்தாள் உரத்திற்கான சணப்பு விதை காலம் கடந்து விற்பனைக்கு வந்துள்ளதால் மந்தமாக உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடி 14,707 ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி பயன்படுத்தி வருவதால், மண் வளம் கெட்டுள்ளது. நெல் சாகுபடி நிலங்களில் தக்கப் பூண்டு, சணப்பு, கொளுஞ்சி விதைப்பு செய்து, 50 நாட்கள் கழித்து, வளர்ந்த பயிரை அப்படியே மடக்கி உழவு செய்தால், மண்ணிற்கு பசுந்தாள் உரம் கிடைக்கும்.
கம்பம் பள்ளத்தாக்கில் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் விதைப்பு செய்து, ஜூன் நடவிற்கு முன் மடக்கி உழவு செய்வார்கள். இதனால் பசுந்தாள் உரம் மண்ணிற்கு கிடைக்கும். 15 ஆண்டுகளாக வேளாண் துறை தக்கைப் பூண்டு வழங்குவதில்லை. இந்தாண்டு சணப்பு மட்டும் வழங்கி உள்ளது. ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் மாவட்டத்திற்கு 100 டன் என்றும், ஒரு வட்டாரத்திற்கு 14 டன் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ ரூ.100, இதில் 50 சதவீத மானியம் போக ரூ.50 செலுத்த வேண்டும். 20 கிலோ விதைக்கு ரூ.ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சணப்பு விதைகளை விற்க, வேளாண் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நெல் சாகுபடி நிலங்களுக்கு கொடுப்பது தான் வழக்கம். காரணம் ஒரே வரிசையில் நிலங்கள் உள்ளன. மண்ணின் வளம் அதிகரிக்கும். ஆனால் தற்போது நெல் நடவு பணிகள் முடியும் நிலைக்கு வந்துள்ளதால் இனி நெல் விவசாயிகள் சணப்பு விதைகளை வாங்க மாட்டார்கள். தென்னை, வாழை , மக்காச் சோளம் போன்ற பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது. விற்பனை மந்தமாக இருப்பதால் வேளாண் துறை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளனர்.