பேரூராட்சி பணி வழங்காமல் இழுத்தடிப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் முடக்கம்
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு மஸ்தூர் பணியாளர்களுக்கு பணி வழங்காமல் இழுத்தடிப்பதால் டெங்கு தடுப்பு பணிகள் முடங்கியுள்ளது.
இப் பேரூராட்சியில் 2024 -2025 ம் ஆண்டிற்கு 12 மஸ்தூர் பணியாளர்களை பேரூராட்சி நிர்வாகம் டெங்கு தடுப்பு பணிக்கென நியமித்துள்ளது. டெண்டர் மூலம் ஒரு ஆண்டு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இது தற்காலிக பணியாகும். பல ஆண்டுகளாக இவர்கள் பணியில் உள்ளனர் . தற்போது தூய்மை பணியாளர் சங்கம் என்ற அமைப்பிற்கு அனுமதி வழங்கி கடந்த மார்ச் பேரூராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. தூய்மை பணியாளர் நலச்சங்கம் என்ற அமைப்பின் மூலம் இந்த 12 பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும் .
ஆனால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இதுவரை பேரூராட்சி பணி ஒதுக்கீடு செய்யவில்லை. 3 மாதங்களுக்கும் மேலாக அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யாமல் பேரூராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த மஸ்தூர்களை வைத்தே டெங்கு தடுப்பு பணிகளை ஆரம்ப சுகாதார நிலையமும் செய்து வருகிறது. பணி ஒதுக்கீடு செய்யாததால் டெங்கு தடுப்பு பணிகள் முடங்கியுள்ளது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முருகனிடம் அலைபேசியில் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொ) மணிமாறனிடம் கேட்டதற்கு, ஒராண்டிற்கு ஒரு முறை ஆண்டு டெண்டர் மூலம் மஸ்தூர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
கடந்த மார்ச்சில் காமயகவுண்டன்பட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செயல் அலுவலர் ஏன் பணிகளை ஒதுக்கவில்லை என தெரியவில்லை. பணிஒதுக்க அறிவுறுத்துகிறேன் என்றார்