உலக வங்கி பிரதிநிதிகள் குழு கண்மாய்களில் ஆய்வு
கம்பம்,சின்னமனூர் கண்மாய்களில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்ய உலக வங்கி நியமித்த அண்ணா பல்கலை. நிபுணர் குழுவினர் நேற்று மாலை கண்மாய்களில் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர்.
கம்பம் வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டு ஒடப்படி குளங்கள், சின்னமனூர் கருங்கட்டான் குளம் ஆகிய கண்மாய்களில் 2018 முதல் 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து உலக வங்கி பிரதிநிதிகளான அண்ணா பல்கலை நீரியல் துறை இயக்குனர் மாதவி கணேசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், கள ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், புராஜக்ட் அசோசியேட் சதீஷ் குமார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
கம்பம் விவசாய சங்க தலைவர் நாராயணன், செயலாளர் சுகுமாறன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர். உலக வங்கி நிதி உதவியுடன் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் திருப்தியாக உள்ளதா என கேட்டனர். அதற்கு விவசாயிகள் திருப்தியளிக்கவில்லைஎன்றனர்.
குளத்தை தூர்வாரவும், சாக்கடை கலக்காமல் இருக்கவும், ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரினர். கரைகளை பலப்படுத்தியதில் திருபதியில்லை என்றனர்.
தொடர்ந்து சின்னமனூர் கருங்கட்டாக்குளந்தை ஆய்வு செய்தனர். இந்த குழுவினருடன் பெரியாறு மேற்பார்வை பொறியாளர் அன்புசெழியன், வேளாண் உதவி இயக்குனர்கள் பூங்கோதை, பாண்டி உள்ளிட்ட தோட்டக்கலை, மீன் வளத்துறை, கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஒருங்கிணைத்து உலக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிகிறது.
அரசு துறைகள் மூலம் பயன் பெற்ற பயனாளிகளை அழைத்து பேசினார்கள்.