டாக்டர், பணியாளர்கள் பற்றாக்குறையால் தவிப்பு: போடி அரசு மருத்துவமனையின் அவலம்
போடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1800 புற நோயாளிகள், 100 பேர் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். போடி,போடிமெட்டு, சோலையூர் உள்ளிட்ட மலைக் கிராம மக்களும், கேரள பகுதியான பூப்பாறை, நெடுங்கண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இம் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், கண் மருத்துவ உதவியாளர், நர்சிங் உதவியாளர்கள், மருந்து கட்டுபவர், மருத்துவ பணியாளர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர், வாட்ச்மேன், போதிய துப்புர பணியாளர்கள் இல்லை.
இம்மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய 19 டாக்டர்களில் 11 பேர் மட்டுமே உள்ளனர். 8 பணியிடம் நீண்ட காலமாக காலியாக உள்ளது. இங்கு எலும்பு முறிவு டாக்டர், அறுவவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால் பிற மருத்துவமனையில் இருந்து வாரம் இரு நாட்கள் வந்து செல்கின்றனர். அறுவை சிகிச்சை நிபுணர் வாரத்தில் செவ்வாய், புதன் நாட்களில் வருவதால் மற்ற நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் நோயாளிகள் காத்திருக்கின்றனர். இதேபோல்
கண் மருத்துவ உதவியாகளர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. அவரும் வாரம் 2 நாள் வருவதால் மற்ற நாட்களில் கண் பரிசோதனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால் நோயளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மருத்துவமனையில் மின் வயரிங் செய்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அடிக்கடி மின் கம்பிகள் கட் ஆகி மின் பழுது ஏற்படுகிறது. மின் பழுதால் பலநேரங்களில் மகப்பேறு சிகிச்சை அளிக்க முடிவதில்லை.
ஜெனரேட்டர் வசதி இருந்தும் வயரிங் பழுதால் பயன்படுத்த முடிவதில்லை. இதனை உடனே சீரமைக்க எலக்ட்ரீசியன் இல்லாததால் பல நாட்கள் வார்டுகள் இருளில் முழ்க வேண்டியுள்ளது. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிர் பலியாகும் நிலை உருவாகிறது. மின் பழுதை சரி செய்ய மற்ற மருத்துவமனைகளில் பணிபுரியும் எலக்ட்ரீசியனை அழைத்து வர வேண்டிய அவல நிலை உள்ளது.
இங்கு துப்புரவு பணியாளர்கள் 15 பேர் பணியாற்ற வேண்டிய நிலையில் 5 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் மருத்துவமனையில் சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
பிளம்பர் இல்லாததால் குடிநீர் இணைப்பு, போர்வெல் பைப் லைன்கள் பழுது ஏற்படுவதை சரி செய்ய முடியவில்லை. பாதுகாப்பு இல்லாததால் கால்நடைகள் உலா வருகின்றன. இதனால் நோயாளிகள் அச்சமடைகின்றனர்.
மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் நிரப்பிட மருத்துவு நலப் பணிகள் இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.