ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
போடி : போடி அருகே மரக்காமலை சன்னாசி ராயர், முனீஸ்வரன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் அமைந்து உள்ளது மரக்காமலை சன்னாசிராயர், முனீஸ்வரன் கோயில். பல நுாற்றாண்டுகளுக்கு முன் உருவான இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். துவக்கத்தில் பாதை வசதி இல்லாத நிலையில் நீர்வரத்து ஓடை, தோட்ட பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வெளியூரில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் அணைக்கரைப்பட்டி கிராம கமிட்டி மூலம் கோயில் பாதையின் இருபுறமும் ஆக்கிரமித்து இருந்த மரங்களை அகற்றி 3 கி.மீ., துாரம் ரோடுக்கான பாதை ஏற்படுத்தினர்.
இப்பகுதியில் ரோடு வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக, மண் பாதையாக உள்ளது. இதனால் டூவீலர், ஆட்டோ, கார், வேன் மூலம் செல்லும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பக்தர்களின் சிரமங்களை தவிர்க்க ரோடு அமைக்க போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.