Wednesday, April 16, 2025
தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது – அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே இல்லை என்ற அளவுக்கு, தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகக் காவல்துறையினரை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, தி.மு.க. இனியாவது கைவிட வேண்டும்.பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை உணர்ந்து, உடனடியாக சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *