ரூ.56.47 கோடியில் கட்டடம் திருச்சியில் திறந்து வைத்தார் ஸ்டாலின்
திருச்சி அருகே துவாக்குடியில், அரசு மாதிரி பள்ளிக்காக, 56.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை விமானத்தில் திருச்சி வந்தார்.
வர வேற்பு
விமான நிலையத்தில் அவரை, அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மகேஷ், சிவசங்கர், மெய்யநாதன், கட்சியின் துணை பொதுச்செயலர் எம்.பி., சிவா, திருச்சி எம்.பி., துரை வைகோ, கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.
விமான நிலையம் உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்கணக்கான தி.மு.க., தொண்டர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் வரவேற்க நின்றிருந்த பொதுமக்கள் சிலரிடம், கோரிக்கை மனுக்களை முதல்வர் பெற்றார்.
பின், விமான நிலையத்தில் இருந்து துவாக்குடி சென்ற முதல்வர், அங்கு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே அரசு மாதிரி பள்ளி புதிய கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மற்றும் 56.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.
மாதிரி பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள், முதல்வரிடம் விளக்கினர்.
புகைப்படம்
புதிய கட்டடத்தை சுற்றிப்பார்த்த பின், அங்கே இருந்த அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியரிடம் கலந்துரையாடி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து ஓய்வுக்காக, திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
முதல்வர், மாதிரிப்பள்ளி திறப்பு விழாவுக்கு வந்த போதும், மீண்டும் திரும்பிச் சென்றபோதும், சாலையின் இருபுறமும் கட்சியினரும், பொதுமக்களும் திரளாக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.