உயர்கல்வி மாணவர் சேர்க்கை இணையதளம் அமைச்சர் கோவி.செழியன் துவக்கம்
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேருவதற்கான இணையதளத்தை, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், நேற்று துவக்கி வைத்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகும் நிலையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உயர் கல்வி சேர்க்கைக்கான இணையதளங்களை, அமைச்சர் துவக்கி வைத்தார்.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலை வளாக இன்ஜினியரிங் கல்லுாரிகள், அதன் உறுப்பு கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க, அடுத்த மாதம் 6ம் தேதி வரை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு, 500 ரூபாயாகவும், பட்டியலினத்தவருக்கு, 250 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசல் சான்றுகளை, ஜூன் 9ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். 11ம் தேதி, சமவாய்ப்பு எண் ஒதுக்கப்படும். 10 முதல் 20ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
பின், 27ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். குறைகளை நிவர்த்தி செய்ய, 28 முதல் ஜூலை 2 வரை அவகாசம் வழங்கப்படும்.
புதிய பாடப்பிரிவுகள்
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கணினி அறிவியல் தொழில்நுட்ப படிப்பில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக்கற்றல், சைபர் பாதுகாப்பு, தரவு அறிவியல் பாடப்பிரிவுகள், இந்தாண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், மெக்கட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி, மின்னணு பொறியியல், கருவியியல், தொழில் துறை உயிர் தொழில்நுட்பவியில் உள்ளிட்ட பிரிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 720 மாணவர்கள் புதிதாக சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாலிடெக்னிக்
தமிழகத்தில் உள்ள, 57 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர, https://tnpoly.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதில், 13 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, 110 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அந்த கல்லுாரிகளில், 360 மாணவர்கள் பயன் பெறும் வகையில், 5 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை அறிய, 1800 4250110 என்ற தொலைபேசி எண்ணிலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்தாண்டு முதல், திருவொற்றியூரில் புதிய பாலிடெக்னிக் கல்லுாரி துவங்க உள்ள நிலையில், அதற்கும் சேர்க்கை துவங்கி உள்ளது.
கலை மற்றும் அறிவியல்
தமிழகத்தில் உள்ள, 165 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விரும்புவோர், https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
குன்னுார், நத்தம், ஆலந்துார், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, கொளக்காநத்தம், ஒட்டப்பிடாரம், முத்துப்பேட்டை, திருவிடைமருதுார் ஆகிய இடங்களில் புதிய கல்லுாரிகள் துவக்கப்படும் நிலையில், அவற்றிற்கும் சேர்க்கை நடக்கிறது. அனைத்துக் கல்லுாரிகளிலும் உள்ள 159 பாடப்பிரிவுகளில், 1.25 லட்சம் மாணவர்கள் படிக்க இயலும்.
நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி, கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் இன்னசன்ட் திவ்யா, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.