5மணி நேரம் காத்திருந்த விளையாட்டு வீரர்கள்
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங், ஹாக்கி மைதானங்கள் திறப்பு விழாவிற்கு அமைச்சர் பெரியசாமி வர தாமதம் ஏற்பட்டதால் வீரர்கள், வீராங்கனைகள் வெயிலில் 5 மணிநேரம் காத்திருந்தனர்.
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ. 30லட்சம் செலவில் ஸ்கேட்டிங் மைதானம், ரூ.31.30 லட்சம் செலவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் பெரியசாமி வருகிறார் என்பதால் விழா நடப்பதற்கு முன்னதாக பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் காலை 9:00 மணிக்கே வீரர்கள் மைதானத்திற்கு வந்தனர். சில பள்ளிகளில் மாணவர்களை 10:00க்கு மேல் அழைத்து வந்தனர். சில பெற்றோர்களும் வந்திருந்தனர். விழாவிற்கு வந்தவர்களுக்கு குடிநீர், நிழற் பந்தல் வசதி செய்யவில்லை. இதனால் மாணவர்கள், பெற்றோர் வெயிலில் அவதிப்பட்டனர். பெற்றோர் சிலர் கடைகளில் குளிர்பானம் வாங்கி கொடுத்தனர். பலர் குடிநீர் இன்றி தவித்தனர்.
சில மணிநேரத்திற்கு பின் குடத்தில் குடிநீர் வைத்தனர். பின்னர் குடிநீர் குடங்களில் லெமன் ஜூஸ் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி, விளையாட்டு அலுவலகத்தை சேர்ந்தவர்கள் போட்டோ எடுத்தனர்.
திண்டுக்கல், பெரியகுளத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாம்களில் பங்கேற்று மதியம் 2:10 மணியளவில் அமைச்சர் பெரியசாமி ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார். அருகில் இருந்த குழந்தையை அழைத்து ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்தார். உடன் கலெக்டர் ஷஜீவனா, எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், மகாராஜன், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா உடனிருந்தனர்.